கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிவாழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மருத்துவ மையக் கட்டிடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதிய ஊரக மருத்துவ மையக் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், “கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி ஊரக மருத்துவ மையத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பரிசோதனைகள் இலவசம்
இப்புதிய ஊரக மையத்தில் புறநோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெறுவதற்கான கட்டணம் ரூபாய் 30 மட்டுமே செலுத்தி ஒரு வருடம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

மையத்தில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தத்தில் உப்பின் அளவு, கிரியாடினின், ரத்ததில் சர்க்கரை அளவு, பாப் ஸ்மியர் பரிசோதனை, ரத்த வகை, மலேரியா பாரசைட், மார்பு எக்ஸ்ரே, இசிஜி போன்ற அனைத்து பரிசோதனைகளும் இலவசம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மூன்று நாட்களுக்கான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
