கோவை, வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சமூக கடமைகளில் ஒரு பகுதியாக ரூ.2.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தனி தனியே கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, உதவி ஆணையாளர் ராம்குமார், மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன், கோவை கிழக்கு காவல் உதவி ஆணையாளர் வேல்முருகன், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்திப் பலன்பெற வேண்டும். சமூக கடமை நிதியினை பிற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செலவிடுவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர் சமூக பணிகளில் கே.எம்.சி.ஹெச்!
விழாவில் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில்: கல்வி மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.
சமீபத்தில் வடமதுரை மற்றும் கழிக்கநாயகன்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கட்டிடம், ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம், கோவை மாவட்டத்தில் அமையவுள்ள உலகத்தர கிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. 1 கோடி நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறையான சமூக பணிகள் செய்வதன் மூலம் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும், அவர்கள் முன்னேற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும் என்று பேசினார்.

