கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சார்பில் “லிவர் நியூட்ரிகான் 2026” என்ற கல்லீரல் ஊட்டச்சத்து சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்வில், கேஎம்சிஹெச் லிவர் டயட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு அல்லது நாள்பட்ட கல்லீரல் நோயாளிகள் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக இந்த புதுமையான உணவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கல்லீரல், இரைப்பை குடல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் வழிநடத்திய தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கல்லீரல், கணையம் மற்றும் குடல் தொடர்பான சிக்கலான நிலைகளை நிர்வகிப்பதில் மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சையின் முக்கிய பங்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், கல்லீரல் கொழுப்பு நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இம்மாநாடு காலத்தின் கட்டாயம். கல்லீரல் கொழுப்பு நோயைத் தடுப்பதற்கும், கல்லீரல் சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கேஎம்சிஹெச் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, தீவிரமான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான ஊட்டச்சத்து மற்றும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தத் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
