இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பில், கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமிக்கு, மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவத் துறையில் அவர் ஆற்றிவரும் மிக முக்கியமான பங்களிப்புகளுக்காகவும், நீடித்த சேவைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய மருத்துவ சேவையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் 2வது பதிப்பு மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. கங்கா மருத்துவமனை மற்றும் மருத்துவ மையத்தின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் ராஜசபாபதி விருதினை வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, “இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றது எனக்கு மிகப்பெரிய கௌரவத்தையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்த விருது எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அங்கீகாரம் மட்டுமல்ல; கே.எம்.சி.ஹெச் குடும்பத்தின் அயராத உழைப்புக்குக் கிடைத்த சான்றாகும்,” என்று கூறினார்.
