கோவை மாநகராட்சியின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்பிக்கும் மாமன்ற கூட்டம் மாநகராட்சியின் பிரதான அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவ குருபிரபாகரன் மற்றும் மாமன்ற  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 2026 -2027 ஆம் நிதியாண்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ.4915.50 கோடி எனவும் வருவாய் செலவினம் மற்றும்  மூலதனம் செலவினம் மொத்தம் ரூ.5041.71 கோடி எனவும் மதிப்பீடு செய்யபட்டு உள்ளது. இதனால் 2026 -2027 -ஆம் நிதியாண்டில் நிகரப்பற்றாகுறை ரூ 126.21 கோடி ஆகும் என மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2026-27 நிதியாண்டிற்கான கோவை மாநகராட்சியின் பட்ஜெட்டில் மாநகராட்சி – கல்வி, பொது சுகாதாரப்பிரிவு, பொறியியல், பாதாள சாக்கடை திட்ட பணிகள்; குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை என பல பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம்:-

மாநகராட்சி பள்ளிகளின் மின்சார செலவை குறைக்கும் நோக்கில் சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்படும். இதற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திலும் தல 1 பள்ளி தேர்வு செய்யப்பட்டு அதில் நவீன தகவல் தொழில்பநுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கென ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

போதுமான இடவசதி உள்ள மாநகராட்சி பள்ளிகளில், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் அமைக்கப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் 71 எரியூட்டும் இயந்திரங்கள் வழங்கப்படும். இதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. (பராமரிப்பு கட்டணம் சேர்த்து).

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 500 மாணவர்களுக்கு மேற்பட்டோர் பயிலும் 20 மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

10 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் மொழி திறனை மேம்படுத்த மொழி ஆய்வகம் அமைக்கப்படும். இந்த ஆய்வகங்களில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பேசும் திறனை வளர்க்கும் வகையில் ஒலி-ஒளி சாதனங்கள் பயன்படுத்தப்படும். இதற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் 5 மாநகராட்சி பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டு வசதி இல்லாத பள்ளிகளில் வகுப்பறைகளின் மேற்பகுதியில் கூரையுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் 100க்கும் கூடுதலாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு  உபகரணங்கள் வழங்கப்படும். இதற்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியாண்டில் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் பழுதடைந்த கட்டிடங்களில் தேவையான பழுதுபார்த்து-பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர் மற்றும் வளைவு அமைக்க 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

100ஆண்டுகள் பழமையான பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். பழுதடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பான வகுப்பறைகள் உருவாக்க இந்த நிதி ஆண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கும் தேவையான இடங்களில் பழைய கழிப்பறைகளின் பழுதுபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய 20 அங்கன்வாடி மையங்களில் உட்கட்டமைப்புகள் சீரமைக்கப்பட இருக்கிறது இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 17 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு & 12ஆம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் செய்முறை திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் கற்றல் கற்பித்தல் செயல்முறைக்கு தேவையான நவீன அறிவியல் உபகரணங்களும் வழங்கப்படும். இதை செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதியாண்டும்,  அவர்களின் முதல் ஆண்டு கல்விக் கட்டணத்திற்கு நிதி உதவி வழங்க, மேலும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்க, தகுதி பெரும் மாணவர்களுக்கு தலா ரூ.25,000 மிகாமல் கல்வி கட்டணம் செலுத்தப்படும், கூடுதல் நுழைவுத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படும். இதற்கென ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு 20 பள்ளிகளில் உயர்தர ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட உள்ளது. இதற்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினி பயிற்சி மற்றும் டிஜிட்டல் கல்வி வசதிகள் வழங்க லேப்டாப், கம்ப்யூட்டர், யூ.பி.எஸ் மற்றும் இன்வெர்ட்டர் பேட்டரி வழங்கப்படும். இதற்கென ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பொது அறிவை வளர்க்கவும் கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டதை போலவே இந்த நிதி ஆண்டிலும் மாநகராட்சி பள்ளிகளில் தினமலர், தினகரன், தினமணி மற்றும் இந்து போன்ற நாளிதழ்கள் வழங்கப்படும். இதற்கென ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை குறைவாக காட்டும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் இணைந்து கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை உணர்த்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

கோவை மாநகராட்சியின் 10 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தட்டச்சு திறனை (டைப் ரைடிங்)  மேம்படுத்தும் நோக்கில் தட்டச்சு இயந்திரங்கள் வழங்கப்படும். இதற்கு தகுதியான தனியார் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவார்கள். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் காலியான ஆசிரியர் பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்து வெளி-முகமை மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை தொடரும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள 4 பள்ளிகளில் மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.