ஈஷா யோகா மையத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை’ வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அமராவதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். இதில் பழங்குடியின மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையைப் பெற்றனர்.

முன்னதாக, இவ்விழாவில் கடந்த ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஈஷாவின் கல்வி சேவைகள் தொடர்பான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஈஷாவைச் சுற்றியுள்ள பச்சான்வயல்பதி, சர்கார் போறத்தி, சீங்கபதி, முள்ளாங்காடு, தானிக்கண்டி, மடக்காடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இக்கல்வி உதவித்தொகையின் மூலம் மாணவர்கள் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா, பி.எஸ்.ஜி, இந்துஸ்தான், வி.எல்.பி ஜானகியம்மாள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய துறைகளில் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக மருத்துவம், மென் பொறியியல், வணிகவியல், விமானநிலையம் மேலாண்மை, தடயவியல் உள்ளிட்ட துறைகளில் கிராம மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
