கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21-ம் தேதி, சத்குரு முன்னிலையில் ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 5,00,000, ரூ. 3,00,000, ரூ. 1,00,000, ரூ. 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ரூ.67 லட்சம் வழங்கப்படுகின்றன.
விளையாட்டுகளுடன் வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து, புலி வேஷம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய உணவுப் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறுகின்றன. பொதுமக்களுக்கான வண்ணக் கோலப் போட்டி, பல்லாங்குழி, பானை உடைத்தல் போன்ற 25-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.

