ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார்.  சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

சத்குரு பேசுகையில், இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை அச்சம் அல்லது பாதுகாப்பற்ற உணர்வோடு அணுகக் கூடாது. மாறாக, இந்த வாய்ப்புகளைத் திறந்த மனதோடும் துணிச்சலோடும் அணுக வேண்டும்.

இந்தியா ஒரு வல்லரசு ஆகும் என்று அனைவரும் சொல்கிறார்கள். ‘வல்லரசு’ என்பது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கிறது. நாம் உலகின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை, உலகில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகிறோம் எனக் கூறினார்.

தேஜஸ்வி சூர்யா பேசுகையில், இந்தியா 77 ஆண்டு கால குடியரசாக இருக்கலாம், ஆனால் நம்முடைய நாகரீகம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. வாழ்க்கையை எப்படி வாழ்வது மற்றும் வாழ்க்கை முறையை எப்படி கண்ணியமான முறையிலும், கௌரவமான முறையிலும் கையாள்வது என்பது குறித்து உலகிற்கு சரியான பாதையையும் வழிகாட்டுதலையும் வழங்கிய நாகரீகம் நம்முடையது. அதற்காக, பாரதம் எப்போதும் உலகிற்கு ஒரு ‘விஸ்வகுரு’வாக இருந்திருக்கிறது, இனி எப்போதும் இருக்கும் எனக் கூறினார்.