ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கல்விக்காக, ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 30 பிரம்மச்சாரிகள் சென்னையில் நடைபெற்ற ‘சென்னை மாரத்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாரத்தான் நிகழ்வில் ஈஷா பிரம்மச்சாரிகள் 10 கி.மீ, 21 கி.மீ மற்றும் 32 கி.மீ ஆகிய பிரிவுகளில் ஓடினர்.

இதில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அதிந்திரா கூறுகையில், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். இந்த சூழலில்தான் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷா வித்யா பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

இந்தப் பள்ளிகளில் நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட முறையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் தரமான ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு கல்வி பெறுபவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி பெறுபவர்களாக இருக்கின்றனர்

இப்பள்ளிகளில் படிக்கும் 60 சதவீதம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலமாகவே கல்வி பெற்று வருகின்றனர். மேலும் மொத்த மாணவர்களில் 48 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு 50 வயதாகிறது, இந்தக் குழந்தைகளின் கல்விக்காக மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பது நிறைவாக இருக்கிறது எனக் கூறினார்.