மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ இதுவரை இரண்டு முறை திமுகவிற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தம் உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் துடிப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்திற்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளது. இவர்களில் பலர் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
அதே நேரம் மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு சாதகமான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தில் மம்தா பிரச்சாரம் செய்யும் போது தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய புரிதல் உள்ளது என அவர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.
குறி மேற்கு வங்கத்துக்கா?
தமிழ்நாட்டில் பல மாதங்களாக பொறுப்பு டி.ஜி.பி.யாக (காவல் துறை தலைவர்) இருந்த வெங்கட்ராமனை மாற்றி, தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை புது டி.ஜி.பி.யாக நியமனம் செய்தது. சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களையும் மாற்றியது.
மேற்கு மண்டல காவல் துறை தலைவர், மதுரை மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்கள் போன்ற அதிகாரிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் மாற்றிய நிலையில், இப்போது வரை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் தான் அதிக அளவில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால் தமிழகத்தின் மேல் குறி இல்லையா? என்ற கேள்வியை அரசியல் திறனாய்வாளர்கள் எழுப்புகின்றனர்.
இண்டியா கூட்டணிக்குள் விரிசல்?
தமிழக அளவில் காங்கிரஸ்-திமுக-கமியூனிஸ்ட் கட்சிகள் -விசிக இடையே தேர்தல் காலத்திற்கு சில மாதங்கள் முன்பு சீட்டு பங்கீடு விஷயங்களிலும், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் மூலமாக சுமுகமில்லாத நிலை ஏற்பட்டது. இப்போது தேசிய அளவில் காங்கிரஸ்-திமுக-பாஜக ரகசிய கூட்டு என மம்தா எழுப்பியுள்ள குற்றச்சாட்டு, இண்டியா கூட்டணிக்குள் விரிசல் உள்ளதோ என மீண்டும் யோசிக்கவைக்கிறது.
ஸ்டாலினை தனது சகோதரன், நண்பன் என்றழைத்த மம்தா இம்முறை பாஜக உடன் ஸ்டாலின் கூட்டுவைத்துள்ளாரா என பேசியிருப்பது பல விவாதங்களை இண்டியா கூட்டணி பற்றி ஏற்படுத்த ஒரு காரணமாக உள்ளது.
மம்தாவின் குறி!
எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் மேற்கு வங்கத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது அரசின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அதிகாரிகள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ள நிலையில், இம்முறையும் வெற்றியை பெற வேண்டும் என போராடுகிறார் மம்தா.
மேற்கு வங்கத்தில் இம்முறை வெற்றி பெற்றவுடன் டெல்லி பாஜக மேல் தான் தனது கவனம் இருக்கப்போவதாக மம்தா கூறியுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பாஜகவிற்கு எதிரான காட்சிகளை ஒன்று சேர்க்கவும் மம்தா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
