கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் வணிகத் தொழில்சார் கணக்கியல் துறை, ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம், கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியது.

ஏபியு ஃபின்டெக் அகாடமியின் தலைவர் டாக்டர் மீரா ஈஸ்வரன், ”நிதித் தொழில்நுட்பத்தில் எண்ணிமப் புதுமை”, பெங்களூரு கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக வணிகம், நிதி மற்றும் கணக்கியல் பள்ளியின் இயக்குநர் டாக்டர் பிஜு டாம்ஸ், ”மின்னணுக் கணக்கியலில் வளர்ந்து வரும் போக்குகள்” ஆகிய தலைப்புகளில் சிறப்புரை வழங்கினர்.

மாநாட்டின் தொடக்கவிழாவில் வணிகத் தொழில்சார் கணக்கியல் துறைத்தலைவர், கார்த்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். வணிகவியல் புல முதன்மையர் குமுதாதேவி, மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். கல்லூரி முதல்வர் கீதா,”நிதித்துறையில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் பங்கு” குறித்து தலைமை உரை வழங்கினார்.

பேராசிரியர்கள் மற்றும் சுமார் 970 மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, நிதித் தொழில்நுட்பத்தில் உள்ள புதிய போக்குகள் மற்றும் வளர்ச்சிகளைப் பற்றிய பயனுள்ள தகவல்களை பெற்றனர்.