தனிமனித அமைதி மூலம் உலக அமைதியை ஏற்படுத்த முடியும் என்று திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளையின் நிறுவனர் குருமகான் தெரிவித்துள்ளார்.
உலக அமைதி பெற வேண்டி நவம்பர் மாதம் 11ம் தேதி உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக புதுச்சேரியில் குருமகான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வரும் 11ம் தேதி, 11 மணி 11 நிமிடத்தில் உலக அமைதி கடைபிடிக்கப்படும். உலக அமைதி தினம் அடுத்த ஆண்டு ஜெனீவாவில் அனுசரிக்கப்பட உள்ளது.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே சிந்தனையுடன் அனைவரும் இந்த அமைதிக்காக ஒரு நிமிடம் அமைதி காக்கும்போது, அமைதியின் அலைகள் இடத்திற்கு இடம் பரவி, பிராந்தியம், மாவட்டம், மாநிலம், தேசம் மற்றும் இறுதியில் உலகம் முழுவதும் பரவுகின்றன.
இத்தகைய ஒரு நிமிட அமைதி நவம்பர் 11, 2025 அன்று காலை 11.11 மணி முதல் 11.12 மணி வரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. ஒரு நிமிட அமைதி மூலம் மனம் ஆழ்ந்த அமைதி நிலைக்குச் செல்லும். உலகின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்த ஆழமான மன நிலையில் இருந்து இதைக் கடைபிடித்தால், உலகம் நிச்சயமாக அமைதியாக இருக்கும் என்றார்.
