வரும் 2027ம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பும் இணைத்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. லடாக், ஜம்மு & காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபர் 1ம் தேதியை அடிப்படையையாக கொண்டும், பிற மாநிலங்களில் 2027 மார்ச் 1ம் தேதியை அடிப்படையாக கொண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி வாயிலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
செயலில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மின்னணு முறையில் மத்திய சேவையகத்திற்கு அனுப்பபடும். முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதன்மைத் தரவு கிடைக்க குறைந்தது 2-3 ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம், இந்தி, பிற பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பாளர்கள்/மேற்பார்வையாளர்கள் தரவு சேகரிப்புக்கு தங்கள் சொந்த மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துவார்கள்.
முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை பெற டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வகையில் ஒரு பிரத்யே வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
