மேற்கத்திய நாடுகளிலுள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பெண்களின் உடலும், சருமமும் சற்றே விரைவாகவே முதிர்ச்சியின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தொடங்குவதாக சமீப கால மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியர்களின் சருமம் மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை விட 10 ஆண்டுகள் முன்னதாகவே முதுமைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியப் பெண்களிடம் கரும்புள்ளிகள், சீரற்ற சரும நிறம், கருவளையம் போன்றவை முப்பதுகளின் தொடக்கத்திலேயே தென்பட ஆரம்பிக்கின்றன.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல். அதிகமான சூரிய ஒளி, காற்று மாசுபாடு ஆகியவை சருமத்தில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரதத்தை சீக்கிரமாகச் சிதைக்கின்றன. இதன் விளைவாக சருமம் தளர்ந்து, இளமைத் தன்மை குறைய ஆரம்பிக்கிறது.
உடல் ஆரோக்கியத்தில் இன்னொரு முக்கிய அம்சம் கருப்பை ஆரோக்கியம். மருத்துவ ஆய்வுகளின்படி, இந்தியப் பெண்களின் கருப்பைகள் மேற்கத்திய பெண்களை விட சராசரியாக 6 ஆண்டுகள் முன்னதாகவே முதிர்ச்சி அடைகின்றன. இதன் காரணமாகவே, இந்தியப் பெண்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமே 46-47 வயதிலேயே ஏற்படுகிறது.
குடும்ப பொறுப்புகள், அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது, பெண்களின் உடலில் ‘கார்டிசோல்’ எனப்படும் மனஅழுத்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இது சருமத்தின் பொலிவையும், நெகிழ்வையும் குறைக்கிறது.
இந்தியப் பெண்களில் பெரும்பாலானோருக்கு இரும்புச்சத்து, வைட்டமின் D குறைபாடு காணப்படுகிறது. போதிய சத்துள்ள உணவுகள் இல்லாததால் முகம் வெளிறி, கண்கள் குழிவிழுந்து, சோர்வான தோற்றம் உருவாகிறது. இதுவே அவர்களை வயதானவர் போல காட்டுகிறது.
இதற்கிடையில், தங்களைக் கவனித்துக் கொள்வதை விட குடும்ப தேவைகளுக்கே முன்னுரிமை தருவதால், ஆரம்பகால முதுமை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறுகிறார்கள். இரவு தாமதமாக உறங்கி, அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. போதிய உறக்கம் இல்லாதபோது, உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை இழக்கிறது. இதனால் கண் கீழ் கருவளையமும், தளர்வான சருமமும் தோன்றுகின்றன.
குறிப்பாக அதிகப்படியான சர்க்கரை, சருமத்தில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தைச் சிதைப்பதால், சருமம் தன் இளமைத் தன்மையை இழந்து தொங்கிப் போகிறது. சருமத்தின் உறுதித் தன்மைக்கு புரதம் அவசியமானது. அழகு சாதனங்களை விட, முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், சுண்டல் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உண்பது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து இயற்கைப் பொலிவைத் தரும்.
