கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் 15வது பதிப்பு “கொடிசியா பில்ட் இன்டெக் 2026” கண்காட்சி இன்று துவங்கியது.
வரும் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கட்டுமான கண்காட்சி, இந்தியா முழுவதிலும் இருந்து தொழில்துறையினர், முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
கண்காட்சியை ஜிண்டால் ரியால்டி நிறுவனத்தின் சிஆர்ஓ அபே குமார் மிஸ்ரா சிறப்பு விருந்தினராகவும், எல்&டி நிறுவனத்தின் ப்ரீகாஸ்ட் டிவிஷன் தலைவர் அமித் தீபிப் பார்டே கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறைக்கான நவீன பொருட்கள், ப்ரீகாஸ்ட் மற்றும் தொழில்சார் கட்டுமான முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டுமானத் துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கண்காட்சியில் சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
