டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான ஐடியாத்தான் 2026 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வுகளை உருவாக்குவது மற்றும் புதுமையான யோசனைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து 200 அணிகள் கலந்து கொண்டனர். எஸ்.என்.எஸ் குழுமத்தின் தாளாளர் ராஜலட்சுமி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அனிதா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடக்க உரையில் கோயம்புத்தூர் போஷ் குளோபல் சாஃப்ட்வர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் நவீத் நாராயணன் பேசுகையில், மாணவர்கள் புதுமை சிந்தனை, தொழில்துறை நோக்கமுள்ள தீர்வுகள் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், மாறிவரும் தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முடியும் என்றார்.
யோசனை விளக்கம், முன்மாதிரி கலந்துரையாடல் மற்றும் கல்வி, தொழில்துறை நிபுணர்களின் இறுதி மதிப்பீடு ஆகிய பல கட்டங்களாக போட்டி நடைபெற்றது. எஸ்.என்.எஸ் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் பரிசுகளை வழங்கினார். சி.இ.ஓ டேனியல், கல்லூரியின் துணை முதல்வர் நரேஷ் குமார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து ரூ.5,00,000 பரிசும், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.2,00,000 பரிசும், 14 அணிகள் தலா ரூ.5,000 பரிசும், 8 அணிகள் தலா ரூ.10,000 பரிசும் பெற்றனர்.
