“என் எதிரே போட்டியிடும் வேட்பாளர் மிட்டா மிராசு ஆக இருக்கலாம் நான் உழைப்பாளி, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்கள் குரலுக்கு ஓடி வரக்கூடிய தொண்டனாக இருப்பேன்,” என தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தனது அறிமுக நிகழ்வில் முழங்கினார்.

அதிமுக கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூட்டணியின் கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனனை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

தனது நன்றிகளை எஸ்.பி.வேலுமணிக்கு தெரிவிக்கையில், அம்மன் கே.அர்ஜுனன் “இந்த சாதாரண மனிதனையும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய என் சகோதரனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடனுடன் இருப்பேன்,” எனக்கூறினார்.

நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தனக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் எனும் மம்மதை கிடையாது. தொகுதி மக்கள் ஒரு பிரச்சனை எனக் கூப்பிட்டால் இருசக்கர வாகனத்தில் அவர்களின் இல்லம் தேடி செல்வேன் ஆனால் இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர் ஜெயித்தால் அவர் எங்கிருப்பார் என்பது தெரியாது, என விமர்சனம் செய்தார்.

செந்தில் பாலாஜியை கோவை தெற்கில் திமுக களமிறக்கி உள்ளதை தொடர்ந்து விமர்சித்த அவர், கோவையில் நல்லவர்கள் இல்லையா? எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினர். “நான் இந்த தேர்தலில் பயன்படுத்த போகும் தாரக மந்திரம் ஜனநாயகமா, பணநாயகமா என்றுதான். இந்த இரண்டுக்கும் தான் போட்டி,” என கூறினார்.