கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செல்வபுரம், சொக்கம்புதூர் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வழி நெடுகிலும் திரளான பெண்கள் கூடி நின்று அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: சாதி, சமுதாய வேறுபாடு இன்றி செயல்படக்கூடிய எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தவறான பொய் பிரச்சாரங்களை கூறி வாக்கு கேட்பவர்கள் அதற்குப்பின் தொகுதி பக்கம் வரமாட்டார்கள்.
இந்த பகுதியைப் பொறுத்தவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், பாஜக கூட்டணியில் இருப்பதால் சிலர் தவறான பிரச்சாரத்தை எடுத்து வைப்பார்கள். சாதி சமய வேறுபாடு இன்றி சகோதரனாக பழகி வரும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இதேபோல் இந்த தொகுதியில் கலைக் கல்லூரி, ஆர்டிஓ அலுவலகம், சாலைகள், மேம்பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்த சூழலில், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
யார் என்ன கூறினாலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, சகோதரனாக இருப்பேன். இந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளேன். கோவைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு பேசினார்.
