மண்ணின் வளத்தை பாதுகாக்கும் மண் காப்போம் இயக்கம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு, இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கும் காணொளியுடன், ‘மண்ணை காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்’ என சத்குரு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘மண் நம்மை ஒன்றிணைக்கும்’ எனத் தெரிவித்த அவர், ‘நமது பொருளாதாரம் செழிக்க, மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன் நாட்டின் மண்ணை காக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

2022-ல் துவங்கிய இந்த இயக்கம், விவசாய மண்வளத்தை 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயிர்ச்சத்து நிறைந்ததாக மாற்ற பணியாற்றி வருகிறது. ஐநாவின் யூஎன்சிசிடி, டபல்யூஎப்பி, ஐயூசிஎன் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

காப்28 (துபாய்), காப்29 (அசர்பைஜான்), காப்16 (சவுதி அரேபியா) ஆகிய உலகளாவிய சுற்றுச்சூழல் மாநாடுகளில் இயக்கம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 4p1000, எஸ்இகேஇஎம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து, மண்வளக் கொள்கை விளக்கக் குறிப்புகளை உருவாக்கியுள்ளது. நேபாளம், கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதன் கொள்கைகளை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. குஜராத்தில் ‘பானாஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ உருவாகி, மண்வளம் ஆய்வகத்துடன் செயல்படுகிறது.

30 லட்சம் குழந்தைகள் தங்கள் அரசுத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 400 கோடி மக்களிடம் மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வு பரவியுள்ளது. 60 நாடுகளில் சுவர் ஓவிய பிரச்சாரம் நடத்தப்பட்டது. நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெனிவா ஜெட் டியோ, புர்ஜ் கலிபா உள்ளிட்ட 50 முக்கிய நினைவுச்சின்னங்கள் இயக்கத்திற்காக ஒளிர்விக்கப்பட்டன. 2023-ல், இயக்கம் ‘சுற்றுச்சூழல் சிறந்த சமூக பிரச்சாரம்’ என்ற விருதைப் பெற்றது. ‘மண்வளம் பாதுகாப்பே எதிர்காலத்திற்கான தீர்வு’ என சத்குரு வலியுறுத்தினார்.