இன்று எந்த ஊருக்குப் போனாலும், ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது ஒரு பிரியாணி கடை கண்டிப்பாக இருக்கும். கிராமங்களில்கூட, திருமணம், விசேஷம் அல்லது சிறிய கொண்டாட்டம் என்றாலே, முதல் நினைவுக்கு வரும் உணவு பிரியாணிதான்! ஆனால், இதன் தாயகம் இந்தியா அல்ல.

எண்ணெய் வளம் நிறைந்த ஈரான் (பாரசீகம்) நாடே பிரியாணி தோன்றிய இடம் எனக் கூறப்படுகிறது. அந்த நாட்டில் குங்குமப்பூ உற்பத்தி பெருமளவில் நடந்தது. குங்குமப்பூவை விற்பனைக்காக பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பாரசீக வணிகர்கள், நீண்ட பாலைவனப் பயணங்களில் சாப்பிட ஏற்ற வகையில் ஒரே பாத்திரத்தில் அரிசி, இறைச்சி, வாசனைப்பொருட்கள் கலந்து சமைத்தனர். அதுவே, இன்று உலகையே கவர்ந்த பிரியாணி என்ற பெயரைப் பெற்றது.

பாரசீக வணிகர்கள் சென்ற இடமெல்லாம் பிரியாணியின் மணமும் பரவியது. பின்னர், முகலாய அரசர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அந்த உணவு இங்கும் அடியெடுத்து வைத்தது. குறிப்பாக, தைமூர் லெங்க் எனப்படும் துருக்கிய மங்கோலிய பேரரசன் 1398-ல் இந்தியாவை அடைந்தபோது, தனது படையுடன் பிரியாணியையும் கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.

படை வீரர்களுக்காக அரிசி, காய்கறி, வாசனைப்பொருட்கள் அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்து சாதம் செய்து அப்படியே அதை படை வீரர்களுக்கு சூடாக பரிமாறினார்கள். இதுதான் இந்தியாவுக்கு முதல் முதலில் பிரியாணி வந்த கதை என்று கூறப்படுகிறது.

மேலும், ஷாஜகான் மனைவி மும்தாஜ், ஒரு நாள் படைவீரர்கள் பலவீனமாக இருப்பதை கண்டு, அரிசி, இறைச்சி சேர்த்து ஊட்டச்சத்துள்ள உணவு செய்யச் சொன்னாராம். அதுதான் பிரியாணி என்று சொல்பவர்களும் உண்டு.

இந்தியாவில் பிரியாணி உணவை பெரிதும் பிரபலப்படுத்தியவர்கள் ஹைதராபாத் நிஜாம்களும், லக்னோ நவாப்களும் தான். அவர்களது சமையல் கலாச்சாரத்தில் பிரியாணி மிக முக்கிய இடத்தைப் பெற்றது. அதன் பிறகு, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கே உரிய பாணியில் இதை மாற்றிக்கொண்டது. ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி எனப் பல வடிவங்கள் உருவாயின.

இப்போதெல்லாம், பிரியாணி ஆரோக்கியத்துக்கு பாதிப்பு தரும் என்ற கருத்தும் உண்டு. ஆனால் சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட பிரியாணியை அளவோடு வாரத்துக்கு ஒரு முறை அல்லது விசேஷத்தின்போது சாப்பிடுவது உடலுக்கு கேடு அல்ல. பிரியாணிக்கு  வைக்கப்படும் வெங்காய ரைத்தா, கத்தரிக்காய் தொக்கு போன்றவை செரிமானத்தையும் மேம்படுத்தும்.