வாடகை வீட்டில் வசிப்போர் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சம்பளத்தில் பாதியை வாடகைக்கே கொடுப்பதோடு, அட்வான்ஸ் தொகையும் அதிகம் தர வேண்டியுள்ளது. மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் திடீரென வாடகையை உயர்த்தி விடுவார்கள்.

இந்த நிலையில் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளும், வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

வீட்டை வாடகைக்குவிட்டால், வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு என ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தை எழுதி கையெழுத்திட்டால் மட்டும் போதாது. புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் பதிவு செய்வது எப்படி?

வாடகைதாரரும் உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்யலாம். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதும்.

முக்கிய அம்சங்கள்

இந்த சட்டத்தில் வாடகை வீட்டுக்கு செல்வோர், வீட்டு உரிமையாளர் என இருதரப்புக்கும் நன்மை பயக்கும் அம்சங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை.

ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.

குடியிருப்பு வீடுகளுக்கு, வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக் கூடாது. வணிக கட்டடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.

வீட்டு உரிமையாளர் நினைத்தபோதெல்லாம் வாடகையை ஏற்ற முடியாது. ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் உயர்த்த வேண்டும். உயர்த்துவதற்கு 2 மாதங்கள் முன்பே நோட்டீஸ் மூலம் வாடகைதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

வாடகை இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால் 30 நாள்களுக்குள் உரிமையாளர்கள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே சரி செய்து விட்டு, வாடகை தொகையில் கழித்துக்கொள்ளலாம். இந்த செலவுக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

வீட்டு உரிமையாளர் வீட்டைப் பார்வையிட அல்லது சோதனையிட விரும்பினால் உரிமையாளர் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வமாக எழுதிதர வேண்டும்.

வாடகைத் தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ வெளியேற்ற உத்தரவு இல்லாமல் வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்த முடியாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் எனக் குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது.

வாடகை தகாராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும். வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும்.

வாடகைதாரரை மிரட்டுவதற்காக மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டிப்பது போன்ற அச்சுறுத்தும் செயல்கள் இனி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.