ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எஸ்.ஆர்.இ.சி இன்னோவேட் 2026 என்ற இண்டஸ்ட்ரி ஹேக்கத்தான், ப்ரோஜக்ட் எக்ஸ்போ நடைபெற்றது. இதில் “தொழில்துறை-கல்வித்துறை கூட்டாண்மை மூலம் திறன் இடைவெளியைக் குறைத்தல்”என்ற தலைப்பிலான பேனல் டிஸ்கசனும் நடைபெற்றது.

இதற்கு கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் தலைமை தாங்கி தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

ஜெப்டோ லாஜிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுரேஷ் குப்புசாமி, ஹிரோடெக் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் கீத் நாராயணன், இண்டோ ஷெல் காஸ்ட் நிறுவனத்தின் இணைத் துணைத் தலைவர் சரவணன், சிர்கோர் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செயல்முறைச் சிறப்பு இயக்குநர் ராம்ஜி சேதுராமலிங்கம், ஈஎல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புச் சிறப்பு மற்றும் புத்தாக்க மூத்த இயக்குநர் காளிமுத்து மற்றும் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்த தகவல் தொழில்நுட்ப மேலாளர் அரியநாயகம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் கலந்துக்கொண்டு தொடக்கவுரையை நிகழ்த்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் 630 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 100 அணிகள் இண்டஸ்ட்ரி ஹேக்கத்தானிலும், 86 அணிகள் ப்ராஜெக்ட் எக்ஸ்போவிலும் தங்கள் திட்டங்களைச் சமர்ப்பித்தனர். இதற்காக கலந்துக்கொண்ட தொழில் வல்லுநர்கள், பங்கேற்ற அணிகளுக்கு நடுவர் குழு உறுப்பினர்களாகவும் வழிகாட்டிகளாகவும் பணியாற்றி, மாணவர்களின் முடிவுகளை மதிப்பீடு செய்தனர்.

மேலும் இதன்மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பப் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், சக மாணவர்களுடன் இணைந்து பணியாற்றவும், தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளைப் பெறவும் வாய்ப்பு பெற்றனர்.

அதன் பின்னர் இண்டஸ்ட்ரி ஹேக்கத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல், உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொடக்க நிதி வழங்கப்பட்டது. அதேபோல, ப்ராஜெக்ட் எக்ஸ்போவில் முதல் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.