தினத்தந்தி நாளிதழ், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் என்னும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

தொடக்கவிழாவில் கோவை, மேற்கு மண்டல முன்னாள் காவல்துறைத் தலைவர் பாரி பேசுகையில்: உயர்கல்விக்கான வாய்ப்புகளும் வசதிகளும் தற்காலத்தில் மிகுதியாக உள்ளது. மாணவ, மாணவியர் அவரவர் விரும்பும் பட்டப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அதில் ஆர்வத்துடன் கற்க வேண்டும். கல்வி என்பது அறிவுடன் ஒழுக்கத்தையும் வளர்ப்பது. பெற்றோர்களைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும் வலியுறுத்தினார்.

தினத்தந்தி நாளிதழின் கோவை மேலாளர் மைக்கேல் சுவாமிதாஸ் “கல்விப்பணியில் தினத்தந்தி” என்ற தலைப்பிலும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி, “கல்விப்பணியில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி” என்ற தலைப்பிலும் பேசினர்.

kasc

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொதுச்செயலாளர்  முகமது பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கல்லூரியின் முதல்வர் சங்கீதா வரவேற்புரையாற்றினார்.

கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை என்ற தலைப்பில் கல்வி வல்லுநர் சிவபாலன், வேளாண்மை கல்வி ஆலாசனை என்ற தலைப்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதன்மையர் வெங்கடேசா பழனிசாமி, உயர்கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் அவனாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் குருஞானாம்பிகா, கணினிஅறிவியல் மற்றும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் என்ற தலைப்பில் பாரதியார் பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத்துறை உதவிப்பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 

விழாவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விச் சேவை ஆற்றிவருகின்ற பள்ளி ஆசிரியர்களுக்கு “IGNITERS 2026” விருது வழங்கப்பட்டது.