திராட்சை பழங்களில் தான் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
திராட்சை கொடிகளில் அடிக்கடி பூச்சி தாக்குதல், பூஞ்சை தொற்று, பாசி படர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனால் கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் அடிக்கடி பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பார்கள்.
திராட்சை பழங்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்கும் தன்மை காரணமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள், தூசி மற்றும் அழுக்குகள் பழங்களின் இடைவெளிகளில் படிந்து இருக்க வாய்ப்பு அதிகம். அவை எளிதில் போகாது. அதனால் திராட்சை பழங்களை சாப்பிடுவதற்கு முன் சரியான முறையில் சுத்தம் செய்தல் மிகவும் அவசியம்.
எப்படி சுத்தம் செய்யலாம்?
திராட்சையை வாங்கி வந்ததும் முதலில் காம்புகளில் இருந்து ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக பிரிக்கவும். பிறகு ஓடும் தண்ணீரில் 20–30 விநாடிகள் நன்றாக கழுவ வேண்டும். இதனால் மேற்புறத்தில் இருக்கும் தூசி, அழுக்கு, மாசு போன்றவை நீங்கும்.
உப்பு நீரில் ஊறவைத்தல்
திராட்சையை சுத்தம் செய்வதற்கான எளிதான வழி உப்பு நீரைப் பயன்படுத்துவது தான். பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, திராட்சையை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, புதிய தண்ணீரில் நன்கு கழுவவும். இந்த முறை பூச்சிக்கொல்லிகள், மெழுகு அடுக்கை அகற்ற உதவும்.
சமையல் சோடாவுடன் சுத்தம் செய்தல்
சமையல் சோடா பல பூச்சிக்கொல்லிகளை திறம்பட நீக்கும் என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. திராட்சை மட்டுமல்ல, மற்ற காய்கறிகளிலிருந்தும் இந்த முறையைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகளை அகற்றலாம்.
2 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து திராட்சையை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அவற்றை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம், பேக்கிங் சோடா பூச்சிக்கொல்லி ரசாயனங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கடின தன்மையை உடைக்கும்.
வினிகர் தண்ணீரில் ஊறவைத்தல்
ஒரு பங்கு வினிகர் மற்றும் 3 பங்கு தண்ணீர் கலந்து திராட்சையை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் புதிய தண்ணீரில் கழுவவும். வினிகர் பூச்சிக்கொல்லிகளை அகற்றவும், பாக்டீரியாவைக் கொல்லவும் உதவுகிறது.
