பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள சின்னேரி பாளையத்தில் இயங்கி வரும் சுவஸ்திக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மோகன்ராஜ் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளி மாணவர்களுக்காக தனி யூடியூப் சேனல் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளை உருவாக்கி தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தனது கற்பித்தல் பணியினை புதிதாக செய்து வருகிறார். மேலும் ஆங்கில இலக்கணத்தை விளையாட்டு வழியில் கற்பித்து வருவதுடன் நாட்டின் முக்கிய விழாக்களான ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், பொங்கல் விழா மற்றும் சுதந்திர தின விழா ஆகிய முக்கிய தினங்கள் மற்றும் தேசத் தலைவர்களின் பிறந்தநாள்களில் இணைய வழி வினாடி வினா போட்டி நடத்தி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும் ஊக்குவித்து வருகிறார்.
இது மட்டுமின்றி அவ்வப்போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்வுகள், சைபர் கிரைம் விழிப்புணர்வு,
போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.
இவரது கல்வி சேவையைப் பாராட்டி இவருக்கு கோவையில் உள்ள ஏ.ஜே.கே. கல்விக் குழுமம் சார்பில் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தார். மற்றும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் ஏ.ஜே.கே கல்வி குழும செயலாளர் அஜீத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.