கோவை மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது.
இதில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் கே.ஜி.தியேட்டர் சாலை, கிராஸ்கட் சாலையில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடமும், கோணியம்மன் கோவில், உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தரைத்தள வாகனம் நிறுத்துமிடமும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
கே.ஜி. தியேட்டர் சாலை
கே.ஜி.தியேட்டர் சாலையில் எழில்மிகு பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதியாக உள்ளதால் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிராஸ்கட் சாலை
காந்திபுரம் கிராஸ்கட் சாலை பண்டிகை காலம் மற்றும் அனைத்து நாட்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதியாகும். இங்கு உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வாகனங்கள் அதிகமாக நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் நெரிசல் அதிகமாகிறது.
எனவே ஒரே சமயத்தில் 200 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100 எண்ணிக்கையிலான இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுதல் பணிக்கு ரூ.20 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய அரசு நிதி ஒதுக்கீடு பெற்று இந்நிதியாண்டில் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கோணியம்மன் கோவில் எதிர்புறம்
கோணியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் வருவாய் ஈட்டும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தரைத்தள வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உக்கடம் பேருந்து நிலையம்
உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் தரைத்தள வாகனம் நிறுத்துமிடம் அமைக்க ரூ 2. கோடி மதிப்பீட்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.
