தடைகளை நீக்கி, வெற்றியும் ஆனந்தமும் அருள்பாலிக்கும் கடவுளாக விநாயகப் பெருமான் கருதப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும்போது முதலில் அவரை வணங்கி வழிபடுவது பாரம்பரியமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இதனால் அந்தக் காரியம் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

புராணங்களின்படி, விநாயகர் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.  அந்நாளே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. குறிப்பாக, புதன் பகவானுக்குரிய புதன்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வருவது மிகுந்த விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்க இந்நாளில் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. ஞாயிறு அல்லது திங்கட்கிழமையே சுத்தம் செய்துவிட வேண்டும். ஆகஸ்ட் 26ஆம் தேதி நல்ல நேரத்தில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வரவேண்டும். மனைப்பலகையில் அரிசி மாவில் கோலம் இட்டு, வாழை இலை விரித்து, பச்சரிசியில் ‘ஓம்’ எழுதி, அதன் மேல் விநாயகர் சிலையை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு உகந்த தும்பை, செம்பருத்தி, சங்கு பூ, எருக்கம்பூ, அருகம்புல் ஆகியவை படைக்கப்படுகின்றன. குறிப்பாக எருக்கம்பூ, அருகம்புல் அவசியம் படைக்கப்பட வேண்டும்.

விநாயகருக்கு உகந்த பிரசாதங்களில் முக்கியமானது கொழுக்கட்டை. இதோடு மோதகம், லட்டு, அப்பம், சுண்டல், பழங்கள், வெல்லம், அவல், நெய் படைத்து வழிபட வேண்டும். எதுவுமே முடியவில்லையெனில், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சர்க்கரை போன்ற எளிய பொருட்களாலும் வழிபாடு செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு நேரம்

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 9.01 மணி முதல் 11.58 மணி வரை அல்லது பகல் 1.31 மணி முதல் 3.50 மணி வரையிலான நேரத்தில் வழிபடலாம். ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று சதுர்த்தி திதி மாலை 3.52 மணிக்குள் முடிவடைவதால் அதற்குள் பூஜை நிறைவு செய்யப்பட வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் சப்தமி திதி வந்து விடுவதால் அதற்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யக் கூடாது.

வழிபாடு முடிந்த பின், வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை மறுநாள் மாலை 6 மணிக்குள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் உள்ள துன்பங்களும் கரைந்து போகும் என்பது ஐதீகம்.