கோவை, உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு கேரளா, ராமேஸ்வரம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான மீன்கள் சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை நாளை ஒட்டி பொதுமக்கள் அதிகாலையில் உக்கடம் மார்க்கெட்டுக்கு வந்து இருந்தனர். அங்கு மத்தி, சங்கரா, நண்டு, பாறை, ஊளி, இறால், வஞ்சிரம், வாவல், சுறா, திருக்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

உக்கடம் மார்ட்டில் வரத்து குறைந்து காணப்பட்டதால், மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.500.,க்கு விற்பனையான வாவல் தற்பொழுது ரூ.750.,க்கு விற்கப்பட்டது. இருந்த போதிலும் மீன்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

மீன்களின் விலை உயர்வு பற்றி வியாபாரிகள் கூறும்போது: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால், பல்வேறு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அடிக்கடி புயல் பாதிப்புகள் ஏற்பட்டு வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வந்ததால் சந்தைக்கு வரும் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

அதே நேரத்தில் கந்தசஷ்டி விரதம் உள்ளிட்ட பண்டிகை நிகழ்வுகள் முடிவுக்கு வந்து விட்டதால் மீன் உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உக்கடம் மீன் மார்க்கெட் வரும் மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது. பருவமழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மீன்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறினர்.