இந்தியாவில் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் முதலீட்டாகப் பார்க்கப்படும் ஒரு பொருளாகவே உள்ளது. குறிப்பாக, பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பங்களில் பெற்றோர்கள் தங்க நகைகளை ஆரம்பத்திலேயே சேமிக்க தொடங்கி விடுவார்கள். சமீபகாலங்களில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், நடுத்தர குடும்பங்களுக்கு நகை வாங்குவது என்பது ஒரு சவாலாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சக்ராதா கிராமத்தில் பெண்கள் அதிக தங்க நகைகள் அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, பெண்கள் வெளியில் செல்லும்போது தாலி, மூக்குத்தி மற்றும் கம்மல் தவிர வேறு எந்த நகைகளையும் அணியக்கூடாது என்று உள்ளூர் பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதை மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் கடந்த 15-20 வருடங்களாக அதிக நகை போட்டுக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இது நகை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
