ஈரோட்டில் வரும் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ‘ஈரோடு தி ஒயாசிஸ் ரெஸ்டாரண்டில்’ நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் ஆடிட்டர் ரவீந்திரன், தொழிலதிபர்கள் சிவசங்கரன் மற்றும் காந்திமதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
கொங்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆதியோகி ரதம் நாளை 7-ஆம் தேதி நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவிலுக்கு பயணிக்க உள்ளது. பின் 8-ஆம் தேதி திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோவிலுக்கும், 9-ஆம் தேதி வேலாயுதம்பாளைத்திற்கும் ரதம் பயணிக்கும்.
அடுத்ததாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூரிலும், 12-ஆம் தேதி கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வழியாகவும், 13-ஆம் தேதி வெள்ளக்கோவில், 14-ஆம் தேதி காங்கேயம் வழியாக பயணித்து, ஜனவரி 15 ஈரோடு மாநகரை வந்தடைகிறது.
ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் ரத யாத்திரை நடைபெற உள்ளது. பின்னர் 17-ஆம் தேதி பெருந்துறைக்கும், 18-ஆம் தேதி சத்தியமங்கலத்திற்கும் இந்த ரத யாத்திரை செல்ல உள்ளது. அதேபோன்று ஜனவரி 19-ஆம் தேதி முதல் அவினாசி, பல்லடம், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.
