ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2025 ஆண்டும் மின் கட்டணம் மேலும் உயர்ந்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்: 12 கிலோவாட் மின் நுகர்வோருக்கு 3பி-யிலிருந்து 3ஏ-க்கு மாற்றம் செய்ய சட்டசபையில் அறிவித்தாலும், அதற்கான அரசாணை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய தமிழக பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று இருக்கிறது. கொரோனாவிற்கு பின் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடன் சுமை மற்றும் மின் கட்டண உயர்வே இதற்குக் காரணம். 2026 பட்ஜெட்டில் மேலும் என்ன அறிவிப்பார்கள்?
மத்திய நிதி அமைச்சர் கோவைக்கு வந்தபோது, பெரிய தொழில் நிறுவனங்களைச் சந்தித்துவிட்டு செல்கிறார்; கார்ப்பரேட் துறை அரசை இயக்குகிறது. எந்த அரசும் வந்தாலும் இது மாறவில்லை. இதை மாற்ற தொழில் முனைவோர் கூட்டமைப்பு வலுவடைய வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், நவம்பர் 9-ஆம் தேதி கோவையில் மாநில மாநாடு நடத்தப்படும். இதில் தொழில்துறை மட்டுமல்லாது, அனைத்து தொழில் சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
முக்கிய கோரிக்கைகள்
நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தொழிற்சாலைகளின் கூரையில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின்தகடுகளால் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்பட்ட 15 சதவீதம் கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மதுக்கடைகளை பகல் நேரத்தில் திறப்பதை தவிர்த்து, மாலை நேரங்களில் திறக்க அரசு ஆவணம் வெளியிட வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகம் அமைக்க வேண்டும்.
ஏற்றுமதி,இறக்குமதி கொள்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படாமல் அமைய வேண்டும்.
தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.