உதகை, கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் முறை அமலில் உள்ளது போல, கோவை மாவட்டம் வால்பாறைக்குச் செல்ல நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப்பகுதிகள், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
உதகை, கொடைக்கானலுக்கு இ-பாஸ் இருப்பதால், அதிகமான சுற்றுலாப் பயணிகள் தற்போது வால்பாறைக்குச் செல்கின்றனர் என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய வனப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
வால்பாறைக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறைகளை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்றும், வாகனங்களில் நெகிழிப் பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
