டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விருது வழங்கு விழா என்.ஜி.பி. கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சென்னை விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தேசிய தலைமை அதிகாரி அனந்தகிருஷ்ணன் தேவராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இவ்விழாவில், கல்லூரி முதல்வர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் பெற்றுள்ள சாதனைகள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில்,’ மாணவர்கள் உறுதுணையாகக் கடின உழைப்புடன் செயல்பட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்’ என்றார். டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு, போட்டி மிகுந்த உலகில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் அனந்தகிருஷ்ணன் தேவராஜ், விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றியபடி, பிட்ஸ் பிலானியில் மேற்படிப்பு படிக்கின்ற வாய்ப்புகள் குறித்து விளக்கினார். கணிப்பொறியியல் மாணவர்கள் இளம்வயதிலிருந்தே தங்களைத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும், தொடர்ச்சியான கற்றல் முக்கியமானது என்றும், எந்த வயதிலும் புதிதாகக் கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

விழாவின் இறுதியில், கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சாதனைபுரிந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.