ஒரு கப் டீ ஒருவருக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிமிடத்தில் அளித்து விடுகிறது. டீ பலருக்கும் பிடித்தமான ஒரு எனர்ஜி ட்ரிங்காக உள்ளது. இது இல்லாமல் பலருக்கும் அன்றைய நாள் தொடங்குவதில்லை. ஆனால், டீ குடிப்பதைவிட முக்கியமானது அதை எந்த நேரத்தில், எந்த உணவுகளுடன் சேர்த்து குடிக்கிறோம் என்பதுதான். உண்மையில், டீயுடன் சேர்த்து சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தவறான நேரத்தில் டீ குடித்தல்
இரவு தூங்கும் முன் டீ குடிப்பது அதிலுள்ள கஃபைன் காரணமாக தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுத்தும். அதேபோல் அதிகாலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது அசிடிட்டி, வாயுத் தொந்தரவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். காலை எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிப்பது சிறந்தது. இரவு நேரத்தில் டீக்கு பதிலாக வெந்நீர் அல்லது மூலிகை பானங்களை தேர்வு செய்வது நல்லது.
அதிக சர்க்கரை
டீயில் அதிக அளவு சர்க்கரை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதுடன், கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கும் காரணமாகிறது. இவ்வாறு தொடர்ந்து டீ குடித்தால் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அபாயமும் அதிகம். எனவே, சர்க்கரையை குறைத்து அல்லது பிளாக் டீயாக குடிப்பது நல்லது.
டீயுடன் ஸ்நாக்ஸ்
டீயுடன் பிஸ்கட், பப்ஸ் போன்ற மைதா உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து நெஞ்செரிச்சல், வாயுத் தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மேலும், இவ்வகை உணவுகளில் அதிக சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்ந்து உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்துக்கும் இது தீங்கு விளைவிக்கக்கூடும்.
அதிக அளவு க்ரீன் டீ
க்ரீன் டீ ஆரோக்கியமானது என்றாலும், அதனை அதிகமாக குடிப்பது சரியல்ல. இதில் உள்ள டானின்கள், கேட்டசின்கள் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. இதனால் ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும், அதிகமாக குடிப்பது உடலிலிருந்து கால்சியம் வெளியேற வழிவகுத்து எலும்புகள் பலவீனமடையக்கூடும்.
மிகவும் சூடாக டீ குடித்தல்
சுடச்சுட டீ குடிப்பது நாக்கு, உதடு போன்றவற்றை சேதப்படுத்துவதுடன், உணவுக்குழாயையும் பாதிக்கக்கூடும். இதனால் பற்கள் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, டீயை ஓரளவு ஆறிய பிறகு குடிப்பது பாதுகாப்பானது.
கவனிக்க வேண்டியது?
டீ குடித்த பிறகு நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. சில நாட்களுக்கு டீ அளவை குறைத்து பார்த்து உடல்நிலை மாற்றங்களை கவனிப்பது நல்லது.
