கே.எம்.சி.ஹெச். தனது சமூக கடமைகளில் (CSR) ஒரு பகுதியாக ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து டாக்டர் என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது.
கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகம் அமைந்துள்ளன.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, தாம் பிறந்து வளர்ந்த நல்லாம்பட்டி கிராம பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் தொடர்ந்து சமூக சேவைகள் ஆற்றி வருகிறார். அதன் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்னர் இதே பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார்.
இந்த புதிய பள்ளிக் கட்டிடத்தை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி திறந்துவைத்தார்.
நிகழ்விற்கு, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், பிரகாஷ் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் முத்துசாமி, சமூக முன்னேற்றம் கருதி கே.எம்.சி.ஹெச் எடுத்து வரும் தனிச்சிறப்பான முன்முயற்சிகளை பாராட்டினார். அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் இந்த நலத்திட்டங்கள் அமைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் இப்புதிய கட்டிடம் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் தவமணி தேவி பழனிசாமி அவர்கள் தனது உரையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்திப் பலன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், சமூக கடமை நிதியினை (CSR) பிற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செலவிடுவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.