இந்து சமய வழிபாட்டின் முக்கிய அங்கமாகக் கருதப்படுவது மணி ஓசை. கோவில் பூஜைகளின் போதும், பக்தர்கள் தரிசனம் முடித்ததும், மணியை அடித்து வணங்குவது வழக்கம். இது வெறும் பாரம்பரியம் சார்ந்தது மட்டுமல்ல, இதற்குள் ஆன்மிகம் மற்றும் அறிவியல் ரகசியங்கள் நிறைந்துள்ளன. மணி ஓசை மனிதர்களின் உடலில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

தெய்வங்களை அழைப்பதற்காக மணி அடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மணியின் ஓசை “ஓம்” எனும் தெய்வீக நாதத்தைப் போல் அமைந்து, அந்த இடம் முழுவதும் நேர்மறையான அதிர்வலைகளை பரப்புகிறது.   எதிர்மறை எண்ணங்கள், தீய ஆற்றல்கள் ஆகியவற்றை நீக்கி, பக்தர்களின் உள்ளத்தையும், சிந்தனையையும் தூய்மையாக்கும் தன்மை இதற்கு உண்டு.

மணியில் இருந்து உருவாகும் கூர்மையான ஒலி, மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைச் சீராகச் செயல்பட வைக்கிறது. வெண்கலத்தால் ஆன மணியில் இருந்து எழுப்பப்படும் ஒலியானது மனித மூளையின் வலது மற்றும் இடது பகுதியை சமநிலைப்படுத்தி, மனஅழுத்தத்தை அகற்றி, தெளிவான சிந்தனையை ஏற்படுத்துகிறது.

காதுகளுக்கு இதமான உணர்வை தந்து, மனதையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது. இதனால் ஒரு விதமான நிம்மதி, புத்துணர்ச்சி நமக்குள் ஏற்படுவதை உணர முடியும்.

மணி இருந்து எழுப்பப்படும் ஓசை ஏழு விநாடிகள் வரை மூளையில் நிலைத்திருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஏழு விநாடிகளில், உடலின் ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு, தூய எண்ணங்கள் மனதில் எழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கோவில் மணி ஒலிக்கும்போது நம் கவனம், சிந்தனை ஆகியவை வேறு பக்கம் செல்லாமல் தடுக்கும். ஒரு அதிர்ச்சி உணர்வை அளித்து, நம்மை நிகழ்காலத்துடன் ஒன்றி இருக்கச் செய்யும் ஆற்றல் மணி ஓசைக்கு உண்டு.

கோவில்களில் இருக்கும் மணிகள் இறை தன்மையைத் தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.  வீடுகளிலும் பூஜை நேரங்களில் மணி அடிக்கும் பழக்கம் நிலவுகிறது. வீட்டில் மணி ஒலிக்கும்போது, துர்சக்திகள் அகன்று, தெய்வீக தன்மை நிறையச் செய்ய உதவுகிறது.