தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். தேர்தல் களத்தில் வெற்றி பெற வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தேர்தல் சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். குறிப்பாக அதிமுகவுக்கு சாதகமான கோவை மாவட்டத்தில் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக – பாஜக கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றது. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் இங்கு அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு கோவை ராசியான மாவட்டமாக இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கோவை திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை.

அதேசமயம் திமுகவுக்கு கோவை மாவட்டம் முற்றிலும் சாதகமாக இருந்ததில்லை என மறுத்து விட முடியாது. 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவே இங்கு வெற்றியை நிலை நாட்டியது.

மற்ற மாவட்டங்களில் அதிமுக, பாஜக கூட்டணி எப்படி இருந்தாலும், கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் பலமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கடந்த காலங்களில் விட்ட செல்வாக்கை இம்முறை பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

கோவையை கைப்பற்ற திமுக, அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, தற்போது ஆட்சியில் உள்ள திமுக கோவைக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் ஒரு பார்வை:

 அதிமுக ஆட்சியில் கோவைக்கான முக்கிய திட்டங்கள்

காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம்

ஆத்துப்பாலம் – உக்கடம் மேம்பாலம்

அவிநாசி சாலை மேம்பாலம்

அரசு நூற்றாண்டு மருத்துவமனை

ராமநாதபுரம், நொய்யல் ஆறு புனரமைப்பு

தொண்டாமுத்தூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு கல்லூரிகள்

பாலக்காடு, மேட்டுப்பாளையம், அவினாசி, 4 வழிச்சாலையாக அமைத்தல்; உயர்மட்ட மேம்பாலங்கள்

பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

பவானி கூட்டு குடிநீர் திட்டம்

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம்

ஐ.டி.பார்க்

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

திமுக ஆட்சியில் கோவைக்கான முக்கிய திட்டங்கள்

சர்வதேச கிரிக்கெட் மைதானம்

சர்வதேச ஹாக்கி மைதானம்

செம்மொழி பூங்கா

பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்

மேற்கு புறவழிச்சாலை திட்டம்

குறிச்சி தொழிற்பேட்டையில் தங்க நகை தொழில் பூங்கா

அவிநாசி சாலை மேம்பாலம் நீட்டிப்பு (சின்னியம்பாளையம் – நீலம்பூர் வரை) 5 கி.மீ. ரூ. 600 கோடி செலவில்

ரூ.200 கோடி செலவில் சிறப்பு சாலை மேம்பாட்டுத் திட்டம்

தகவல் தொழில்நுட்ப பூங்கா

யானை – மனித மோதலைத் தடுக்க தொண்டாமுத்தூரில் 10 கி.மீ. நீளத்திற்கு வேலிகள்