மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

தொடக்கவிழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞர் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நாட்டுப்புற குழு நடனம், நாட்டுப்புற குழு பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய அரசியல் சாசனம் மற்றும் தற்போதைய காலச்சூழல், ஜனநாயகத்தின் மாண்புகள் மற்றும் பாதுகாப்பை விளக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓவியம் வரைதல், கதை எழுதுதல், கவிதை எழுதுதல், முக்கிய குறிப்புகள் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.