உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ‘தி ஐ ஃபவுண்டேஷன்’ கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால் ஏற்படும் கண் பாதிப்பு பற்றி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றது.
மனித சங்கிலியை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன் மற்றும் மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் கோணுகண்டி வம்சி துவங்கி வைத்தனர். நிகழ்ச்சி கே.பி.எஸ்.இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து நடைபெற்றது.
40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியும், சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாவிட்டால் கண் நரம்புகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதை வலியுறுத்தியும், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை அவசியம் என்பதை வலியுறுத்தியும் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சாலை ஓரத்தில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
