கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியைச் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஆலாந்துறை பகுதியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பொதுமக்கள் கேஸ் சிலிண்டருக்காக முன்பதிவு செய்து இருந்தும், விநியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.​

இந்நிலையில் அப்பகுதி வழியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியை வழிமறித்துச் சிறைபிடித்தனர். “ஒரு மாதமாகச் சிலிண்டர் தராமல் ஏமாற்றி வருகிறீர்கள், தற்போது லாரி வந்தும் எங்களுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள்?” என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலாந்துறை போலீசார், லாரியைச் சிறைபிடித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிலிண்டர்களை மாற்றி கொடுத்து விநியோகிக்க செய்தனர்.​

இதுபோன்ற தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுக்கவும், முன்பதிவு செய்த சிலிண்டரைச் சரியான நேரத்தில் பெறவும் பொதுமக்கள் சமையல் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப் பூர்வ மொபைல் செயலிகள் அல்லது இணையதளம் மூலம் உங்கள் சிலிண்டர் விநியோக நிலையை உடனுக்குடன் கண்காணிக்கலாம். நீண்ட நாட்களாக சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கேஸ் ஏஜென்சியின் மேலாளரிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கலாம்.

​தீர்வு கிடைக்காத பட்சத்தில், எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா உதவி எண்களை அணுகிப் புகார் தெரிவிக்கலாம்.​ இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரின் நடவடிக்கையால் நிலைமை சீரடைந்தது குறிப்பிடத்தக்கது.