குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ என்னும் தலைப்பில் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3 நாள் மாநாடு இன்று தொடங்கியது.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் வரவேற்றுப் பேசினார். ரைசெட் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் செயல் தலைவர் குல்ஷன் ராய் இணையவழியில் பேசுகையில்: செயற்கை நுண்ணறிவு, அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களே இன்றைய உலகை வழிநடத்துகிறது.
இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியா தனது சொந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக இந்தியா ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான பட்ஜெட்டில் ‘இந்தியா ஏ.ஐ. மிஷன்’ மற்றும் ‘தேசிய குவாண்டம் மிஷன்’ ஆகியவற்றைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
நிகழ்வில், இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ரைசெட் இணையதளத்தைத் தொடங்கி வைத்து பேசுகையில்: இன்றைய சூழலில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து தேசிய முடிவுகளை வடிவமைக்கிறது.
இன்றைய உலகில் உள்ள தற்போதைய மாற்றங்கள் கணிக்க முடியாத சவால்களைத் தந்தாலும், தெளிவான சிந்தனை மற்றும் துல்லியமான கணிப்புகள் மூலம் அந்த சூழலை மூலோபாய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் அடுத்த பல ஆண்டுகளுக்கு இளைஞர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்பதால் இந்தியாவின் எதிர்கால நலனுக்காக இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
