கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை, பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.

7 1 scaled

தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னிச்சாட்டு நடைபெற்றது. தேர் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றன.

அம்மன் ஒவ்வொரு நாளும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்மவாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை – யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

4 1

விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.  பக்தர்கள் அங்கு உள்ள அக்னி கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இதை ஒட்டி காலை 7 மணிக்கு உற்சவ அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி அருகே அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அம்மன் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

2 1 scaled

இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அம்மன், கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தேர் ராஜ வீதியில் உள்ள தேர் முட்டியில் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக சென்று மீண்டும் தேர் முட்டியை சென்றடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4 2 3 1