கோவை மேற்கு புறவழிச்சாலை முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 கி.மீ தொலைவிற்கு மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்காக சுமார் ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை மதுக்கரை மைல்கல் பகுதியிலிருந்து மாதம்பட்டி வரை ரூ.250 கோடி மதிப்பீட்டில் 11.8 கிலோமீட்டர் தொலைவிக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரையில் 12.10 கிலோமீட்டர் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது.
முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேற்கு புறவழிச்சாலை திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் இருந்து பேரூர் மற்றும் சிறுவாணி சாலைக்கு செல்வோர் புறவழி சாலையை பயன்படுத்திக் கொள்ளவதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
