கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சார்பில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் ‘கோவை புத்தகத் திருவிழா 2025’ ஜூலை 18ஆம் தேதி தொடங்குகிறது.

9வது புத்தகத் திருவிழா வரும் 27 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம். மூன்று அரங்குகளில் நடைபெறும் கண்காட்சியில், மகாராஷ்டிரா, ஹரியானா, அசாம், புது டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த வெளியீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள்.

170க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் 320க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர். பல்வேறு மொழிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறும்.

ஜூலை 18 அன்று மாலை 6 மணிக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். அன்று “இளம் எழுத்தாளர் விருது” மூன்று இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. புனைகதை விருது (அலையாத்தி செந்தில்), புனைகதை அல்லாத விருது (வெண்பா), கவிதை விருது (எஸ். பிரியா) வழங்கப்படும்.

தினமும் கலை, இலக்கிய நிகழ்வுகள், போட்டிகள் நடக்கின்றன. மாலை நேரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கண்காட்சி நாட்களில் மாணவர்களுக்கான போட்டிகள், விவாதங்கள் நடைபெறும். சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.