கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 26 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விழாவில்  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கோயம்புத்தூர் விழா 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். துவக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் ஸ்கை டான்ஸ் எனப்படும் ஒளி, ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்: அனைத்து துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை மாவட்டம் தான். அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண்.

வரும் 26ம் தேதி கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் செம்மொழிப் பூங்காவை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் எனப் பேசினார்.