இளம் தலைமுறையினர் இடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகள், மிக அதிக அளவில் புகையிலைப் பயன்படுத்தப்படுவதால் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

பீடி, சுருட்டு, சிகரெட், குழாய் போன்ற புகையிலைப் பொருட்களை பெரும்பாலும் ஆண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள சுமார் 70 ரசாயனங்கள் உடலுக்குள் நேரடியாக கலக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

உலகளவில் ஆறு பேரில் ஒருவரின் மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது என்று சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள்.

சமீபத்தில் ரஷ்யா புற்றுநோய்க்கான ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்ததாக அறிவித்தது. அது நடைமுறைக்கு வந்தால், இறுதி நிலை புற்றுநோயாளிகளையும் காப்பாற்ற முடியும் என நம்பப்படுகிறது. இருப்பினும், புகையிலையின் காரணமாக ஏற்படும் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

புகையிலையில் உள்ள 70க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உடலில் கலக்கும் போது, அவை ரத்த ஓட்டம் மூலம் அனைத்து உறுப்புகளையும் சென்றடைகின்றன. பின்னர் இவை டிஎன்ஏ.,வை சேதப்படுத்தி, கட்டுப்பாடற்ற புதிய செல்களை உருவாகத் தூண்டுகின்றன. இந்த அசாதாரண வளர்ச்சியே புற்றுநோயை உருவாக்குகிறது.

சிகரெட் அல்லது பீடி புகைப்பவர்களுக்கே அருகில் இருப்பவர்களுக்கும் இந்த ரசாயனங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் அதிகம். சமீபத்திய ஆய்வுகளின்படி, புகைபிடிப்பவர்களில் 10 பேரில் 9 பேர் 19 முதல் 40 வயது வரை உள்ளவர்கள். மேலும், 100 புகைபிடிப்பவர்களில் 5 பேர் மாணவர்கள் எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.

புற்றுநோய் நிபுணர்கள் கூறுவதாவது:  புற்றுநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகையிலைக்கு அடிமையானவர்கள். புகைபிடிப்பு புற்றுநோய் மட்டுமின்றி உடலின் பல்வேறு உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது. முதலில் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல்.

நீண்ட காலமாக புகைபிடிப்பவர்கள் சுவாசக்கோளாறுகள், வாசனை உணர்வில் குறை,பற்களில் கறை படிதல், பல் விழுதல், சுவை குறைதல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர் எனக் கூறுகின்றனர்.