அழகாகத் தோற்றமளிக்க தினமும் பயன்படுத்தும் சில அழகுசாதனப் பொருட்கள், சரும ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இன்றைய வாழ்க்கை முறையில் பலர் தங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினமும் மேக்கப் மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இத்தயாரிப்புகளில் உள்ள சில ரசாயனங்கள் நீண்ட காலப் பயன்பாட்டில் கடுமையான உடல்நல பாதிப்புகளை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சில சேர்மங்கள் சருமத்தின் ஆழமான அடுக்குகளில் உறிஞ்சப்பட்டு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்வதேச சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார இதழில் வெளியான ஆய்வின்படி, பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட சில பிக்மென்ட்கள், ப்ரீசர்வேட்டிவ்கள் மற்றும் வேதிப்பொருட்கள் சருமத்தின் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, இவை சூரிய ஒளியுடன் சேரும் போது எதிர்பாராத விதமாக செயல்பட்டு செல்களுக்கு சேதம் விளைவிக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஃபவுண்டேஷன், ப்ளஷர், லிப்ஸ்டிக் போன்ற தயாரிப்புகளில் உள்ள யுவி ரியாக்ட்டிவ் பிக்மென்ட்கள், கிரீம்கள் மற்றும் லோஷன்களில் காணப்படும் ஃபார்மால்டிஹைடு வெளியிடும் ப்ரீசர்வேட்டிவ்கள், பெட்ரோலிய அடிப்படையிலான பொருட்களில் உள்ள பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்  ஆகியவை இந்த அபாயத்திற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்த சேர்மங்கள் புற ஊதா கதிர்களுக்கு வெளிப்படும் போது நிலையற்ற வேதிச்சேர்மங்களை உருவாக்கி, செல்களின் டி.என்.ஏ.,வை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஃபார்மால்டிஹைடு வெளியிடும் பொருட்கள் சருமத்தில் நீடித்த வீக்கம் மற்றும் செல்களின் செயல்பாட்டில் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

சில ஆர்கானிக் மினரல் பிக்மென்ட்களில் காணப்படும் ஈயம் அல்லது காட்மியம் போன்ற ஹெவி மெட்டல்கள் உடலின் ஆன்டிஆக்ஸிடன்ட் சமநிலையை சீர்குலைத்து ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸை அதிகரிக்கக் கூடும்.

இந்த வகை தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது, சருமம் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். தயாரிப்புகளை பயன்படுத்திய பின் அரிப்பு, எரியும் உணர்வு, சூரிய ஒளி படும் பகுதிகளில் கருமை அல்லது சீரற்ற நிறமாற்றம், உதடுகள் மற்றும் கண்களில் அதிக வறட்சி, சொரி அல்லது பிரேக்அவுட்கள் போன்றவை அதில் முக்கியமானவை.

பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களுக்கு ஃபார்மால்டிஹைடு வெளியிடும் சேர்மங்கள் இல்லாத தயாரிப்புகளைத் தேர்வு செய்வது, மூன்றாம் தரப்பு சான்றிதழ் பெற்ற மற்றும் மாசுபாடற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவது, சூரிய ஒளியில் வெளியே செல்லும் போது தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவை முக்கியமானவை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில், தினமும் ஒரே தயாரிப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக, தயாரிப்புகளை மாற்றி மாற்றி சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். எரிச்சல், சிவத்தல் அல்லது உணர்திறனை ஏற்படுத்தும் தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.