நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயதான மோனிக்ராஜ். தனது தந்தை ராமகிருஷ்ணன், தாய் விஜயகுமாரி மற்றும் மூத்த சகோதிரி மோனிஷா உடன் வசித்துவந்தார்.

இவர் கடந்த 11.03.2026ம் தேதி காலை 8.45மணி அளவில் விவசாயத்திற்காக நீர் பாய்ச்சும் போது எதிர்பாராத விதமாக மின்மோட்டரில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 13.03.2026-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மோனிக்ராஜ் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள் கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய மோனிக்ராஜ் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.