கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் ஏ.வி.வி. குழுமத்தின் நிறுவனர் ஏ.வி.வரதராஜன் எழுதிய “கோவை, கொடிசியா, எனது நினைவலைகள்” நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தலைமைத் தாங்கினார். கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். கொடிசியா முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கையன் நூலை வெளியிட, முதல் பிரதியை கொடிசியா முன்னாள் தலைவர் ஜெகநாதன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கொடிசியா முன்னாள் தலைவர் பழனிசாமி நூல் குறித்த அறிமுகத்தை வழங்கினார்.
எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்பவர் ஏ.வி.வி
கஸ்தூரி ரங்கையன்
முன்னாள் தலைவர், கொடிசியா
ஏ.வி. வரதராஜன் எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்பவர். தொழிலதிபராக இருந்த அவருக்கு நூலாசிரியர் என்ற பட்டமும் வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நாங்கள் எல்லாம் சிறுதொழில் செய்பவர்கள். இருந்தாலும் கோவையின் வளர்ச்சி மற்றும் இங்குள்ள சிறுதொழில்களுக்காக கொடிசியா அமைப்பை பெரும் முயற்சியுடன் இணைந்து உருவாக்கினோம்.
வடஇந்தியாவில் தொழில் கண்காட்சி நடத்தப்படுவதைப் பார்த்தோம். இது சிறுகுறு தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுபோன்ற தொழில் கண்காட்சியை கோவையில் நடத்தினால் இங்குள்ள தொழில்முனைவோர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அதற்கு இடம் தேவைப்பட்டது. அதன் வெளிப்பாடே கொடிசியா தொழிற்காட்சி வளாகம்.
கொடிசியா ஒரு பெரிய கதை
ஏ.வி.வரதராஜன்
நிறுவனர், ஏ.வி.வி. குழுமம்
ஏற்புரை வழங்கி பேசுகையில்: இன்று தொழில்நுட்பம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கொடிசியா என்பது ஒரு பெரிய கதை. இதைப் பற்றி விவரிக்க இந்த ஒரு புத்தகம் போதாது. இன்னும் 10 புத்தகங்கள் எழுதவேண்டும் எனப் பேசினார். மேலும் கொடிசியா உருவாக குழுவாக இணைந்து செயல்பட்ட பல விஷயங்களை நினைவு கூர்ந்தார்.
