பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கோவையில் மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சி 20ம் தேதி வடக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த முறை தமிழகத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்களை பிரதமர் மோடியின் அடுத்த பிறந்த நாளில் பரிசாக கொடுக்கப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
டெல்லியில் பாஜக தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்திப்பது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது என்ற கேள்விக்கு, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு தலைமை ஏற்று கொண்டிருப்பவர், எங்கள் தலைவர்களை பார்க்கிறார். வேறு யாராவது பார்த்தால் தான் அரசியல். அனைவரும் எங்கள் கட்சித் தலைவர்களை தான் பார்க்க செல்கிறார்கள். டெல்லியில் இன்னொரு அரசியல் தலைவரும் இருக்கிறார், அங்கு யாரும் செல்லவில்லை.
அரசியல் கட்சி பிரச்சாரம் எனும் பொழுது எங்களுடைய பேனர்களையும், கட்சிக் கொடிகளையும் அதிகமாக வைக்கவிட மாட்டார்கள். விஜய் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் அதிகமாக தெரிய வருகிறது. இதனை நாங்கள் ஏற்கனவே அனுபவித்து தான் வருகிறோம்.
பிங்க் பஸ்ஸை துணை முதல்வர் வந்து பார்க்க வேண்டும். பிங்க் பெயிண்ட் அடித்தால் மட்டும் அது பிங்க் பஸ் ஆகி விடாது. அந்த பஸ் அதிகமாக விடப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் பாதி வழித்தடத்தில் நின்று விடுகிறது. இதனை வைத்து பெண்கள் ஓட்டு போட போவதில்லை என்று துணை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக பிரசாரத்திற்கு பஸ் வருமா என்ற கேள்விக்கு, மாநிலத் தலைவர் எப்படி வருகிறார் என்பதை வரும்போது பாருங்கள். இப்பொழுது கூறினால் சஸ்பென்ஸ் போய்விடும். மாநிலத் தலைவரின் சுற்றுப்பயணம் குறித்து பொறுப்பாளர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.
